பொதுமக்களை அச்சுறுத்திய டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில் 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் நான்கு பேரை கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.
இதனையடுத்து தமிழ்நாடு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், 8 கால்நடை மருத்துவர்கள், 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள், வனப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமரா மூலம் மசினகுடி வனப்பகுதியில் தேடி வந்தனர். யார் கண்ணிலும் சிக்காமல் T23 புலி போக்கு காட்டி வந்தது. பின்னர் 22 நாட்களுக்குப் பிறகு அந்த புலி பிடிபட்டது.
இந்நிலையில், அந்தப் புலியை, வேட்டையாடி பிடிக்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சங்கீதா தோக்ரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி23 புலி உயிரோடு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, புலியை உயிருடன் பிடித்ததற்கு வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, நிபுணர்களின் உதவியுடன் புலியின் குணாதிசயங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.









