அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன். இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கையான தையல்நாயகி என்பவருக்கு திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
அப்போது வழக்கறிஞர் சாமிநாதன் திருமணத்தை முடித்துவிட்டு மண்டபத்தின் எதிரில் உள்ள பெட்டி கடைக்கு சென்று தனது செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சாமிநாதனை தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன்
தலைமையிலான போலீசார், கொலை செய்யப்பட்ட சாமிநாதனின் உடலை கைப்பற்றி
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து விசாரணை செய்ததில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருப்பந்துறை கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செல்வமணி என்பவரை கொலை செய்த வழக்கில் சாமிநாதனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்விரோதத்தின் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, தா.பழூர் காவல் நிலையம் சென்று சாமிநாதன் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
பட்டப் பகலில் நடு ரோட்டில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட
சம்பவம் அணைக்குடம் பகுதிகளில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.








