குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்ததாக தென் மண்டல பிராந்திய தளபதி அருண் தெரிவித்துள்ளார்.
குன்னூர் அருகே, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற போது, போலீசார், தீயணைப்புத்துறையினர், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், தென் பிராந்திய தளபதி அருண் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய தென் மண்டல பிராந்திய தளபதி அருண், இது நமது நாடு, நமது வீரர்கள் என்ற உணர்வுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் ஓடி வந்து உதவியதாக தெரிவித்தார். இந்த பாராட்டு கூட தங்களுக்கு தேவையில்லை என்றும், இது தங்களது பணி என்று மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் கூறியதாகவும் அருண் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, குன்னூர் அருகே, விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. விபத்து நடைபெற்ற இடத்தில் சிதறிக்கிடக்கும் ஹெலிகாப்டரின் பாகங்களை, ஆய்வுக்காக கட்டிங் மிஷன் மூலம் ராணுவத்தினர் வெட்டி எடுத்து வருகின்றனர்.