அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால், 20-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வருகிற 20-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதையொட்டி, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19 ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
20 ஆம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








