ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மீட்டு மருத்துவமனையின் மற்ற பிரிவுகளுக்கு மாற்றினர். இந்த தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்துள்ளவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் முகேஷ் மகாலிங் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கட்டாக் மருத்துவமனை தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.







