கனமழை எதிரொலி ; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

• நேற்று முன்தினம் (24-10-26) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது தென்கிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது தெற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று மேலும் வலுப்பெற்று மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் நாளை காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

• நேற்று முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது.

• சுமார் 3.1 கிமீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியிலிருந்து வடக்கு தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கையாக இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.