வங்கக் கடலின் கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை நாளை வரையிலும் பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து. பாதுகாப்பாகத் தங்களது வீடுகளுக்குள் இருக்க வேண்டும்.
பலவீனமான அல்லது பாதுகாப்பற்ற வீடுகளில் வசிப்பவர்கள், தாமதமின்றி தங்களுக்கு அருகில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதுகாப்பு நிவாரண முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும்.
அத்தியாவசியத் தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியில் செல்வதையும். கடற்கரைப் பகுதிகள், நீர்நிலைகள், வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கன மழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை(26/10/26) திங்கட்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.




