கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. வேலூர், திருப்பத்தூர்,தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று மாலையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலை காணப்படுகிறது. மழையின் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூரில் இன்று (03-11-2022) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் சென்னையிலும் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








