தொடர் கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
வழக்கத்தை விட இந்தாண்டு கனமழை அதிகளவில் பெய்து வருவதால் பல்வேறு இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் தொடர் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தற்கு உட்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (15/11/2022) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.







