தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மிக கனமழை பெய்யும் மலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 13 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால், தென்மேற்கு பருவமழை வெளியேறுவதற்கு தாமதம் ஆகலாம் என்றும், இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்க தாமதமாகும் என்றும் அவர் கூறினார்.







