சென்னையில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 9ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோரும், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.
பருவமழைக்காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








