ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழைக்கு 31 பேர் பலியாகி உள்ள நிலையில்
100-க்கும் மேற்பட்டோர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் கொட்டிய கனமழையின் காரணமாக, நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், ஆப்கானிஸ்தான் வானிலை ஆய்வு மையம் அந்த நாட்டில் கனமழை தொடர்ந்து சில நாட்களுக்கு பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.







