சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உலக தலைவர்கள் பலரும் இந்தியாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தனது வாழ்த்து செய்தியில், இந்தியாவிற்கு 75வது சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். இந்தியா பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபர் தனது வாழ்த்து செய்தியில், மகாத்மா காந்தியின் வாய்மை மற்றும் அகிம்சை ஆகிய இரு கோட்பாடுகளின் வழியில் விடுதலை அடைந்த இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாழ்த்துக்கள். இருநாட்டு மக்களிடையே உள்ள ஆழமான பிணைப்பினால் இருநாட்டு உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று கூறியிருந்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் தனது வாழ்த்து செய்தியில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்திய மக்களுக்கு என வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமுது சோலிஹ் , ஆஸ்திரேலிய அதிபர் அந்தோணி அல்பானீஸ், உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்ததையடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.







