தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மருத்துவத்துறையில் கர்ப்பிணிகளுக்கான மருந்துகள் வாங்கியதில் ரூ.77 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் கமலாலயத்தில் நேற்று (ஜூன் 05) செய்தியாளர்களை சந்தித்தபோது குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அதனை மறுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயல்படுத்தி வரும் மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வரப் பெற்ற செய்திக்கான விளக்கங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சருடன் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், DPH இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
நேற்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை குற்றச்சாட்டை நான் பார்த்தேன். அவர் கூறிய துறைகள் வாரியாக அவருக்கு விரிவான விளக்கம் பதிலாக அனுப்பப்பட்டுள்ளது. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் 18,000 ரூபாய் உதவி தொகையாக வழங்க கூடிய திட்டம். முழு தொகையும் கர்ப்பிணிகளுக்கு தரப்படமாட்டாது. மாறாக, சில தவணைகள் மட்டும் ஊட்டச்சத்து பொருட்கள் தரப்படும்.
TNMSC அமைப்பில், இன்று தீபக் ஜேகப் என்பவர் மேலாண்மை இயக்குனராக இருக்கிறார். அவர் இந்த டெண்டரில் உட்படுத்தப்படுவோருக்கான தகுதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யக் கூடியவர். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ரூ.450 கோடிக்கான பொருட்களை யாரும் வாங்கவில்லை. அந்தப் பணத்தை நாங்கள் அரசாங்கத்திற்கு திருப்பிக் கொடுத்து விட்டோம். ஆவின் ஹெல்த் மிக்ஸ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உடல்நலம் தருமா என்பதை ஒரு கேள்வியாக நான் முன் வைக்கிறேன். இந்த ஹெல்த் மிக்ஸ் எந்த வீட்டிலாவது தாய்மார்கள் உடல் மேம்பாட்டிற்காக பயன்படுத்துகிறீர்களா என்பது இன்னொரு கேள்வி. WHO பரிந்துரைபடி தற்போது கொடுக்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
ஹெல்த் மிக்ஸ் பவுடரை பொறுத்த வரை, நமக்கு டெண்டரில் கொள்முதல் விலை 460.50 ரூபாய். ஆனால் சந்தை விலை 588 ரூபாய். எனவே இதில் வித்தியாசம் 127.50 ரூபாயாக உள்ளது. அயர்ன் சிரப் பொறுத்தவரை, சந்தை விலை 112 ரூபாய், கொள்முதல் விலை 74.60 ரூபாய், இதில் வித்தியாசம் 37.35 ரூபாயாக உள்ளது.
மேலும் இதை வாங்குவதே சிறந்தது. இதை விட்டுவிட்டு ஆவின் நிறுவனத்தில் வாங்குவது என்பது சரியானது அல்ல. அது தவறான ஒன்று. அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்கு தெளிவான பதில் கொடுக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை தெரிவித்தது போல தமிழக அரசு சார்பில் ஆவின் நிறுவனத்தில் இந்த பொருளை வாங்க வேண்டும் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தது தவறு என அவர் விளக்கம் அளித்தார்.
இதையும் படியுங்கள்: பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர்?- அண்ணாமலை
சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் பேசிய போது, “கிட்டத்தட்ட 32 பொருட்கள் அடங்கிய ஒரு தயாரிப்பு தான் இந்த ஹெல்த் மிக்ஸ். இதனை வெறும் புரோட்டீன் என்று மட்டுமே சொல்ல முடியாது. கர்ப்பிணி பெண்களுக்கு என்ன மாதிரியான அடிப்படை ஊட்டச் சத்துகள் தர வேண்டும் என ICMR பரிந்துரை செய்யபட்டு உள்ளது என அவர் பேசினார்.
-மணிகண்டன்








