“விக்ரம்” பான் இந்தியா படம்: நடிகர் அருண்விஜய் நெகிழ்ச்சி

பான் இந்தியா படம்போல விக்ரம் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மதுரையில் நடிகர் அருண் விஜய் பேசியுள்ளார். திரைப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற…

பான் இந்தியா படம்போல விக்ரம் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மதுரையில் நடிகர் அருண் விஜய் பேசியுள்ளார்.

திரைப்பட இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை
திரைப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து, மதுரையில் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

இயக்குனர் ஹரி கூறுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு அருண்விஜயுடன் கைகோர்த்து படம் பண்ணுகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல்வேறு
மாவட்டங்களில் படத்தின் புரொமோஷன் செய்து கொண்டிருக்கிறோம், விக்ரம் படத்தின் வெற்றி தமிழ் உலகிற்கு மிகவும் தேவையானது. விக்ரம் படத்தின் வெற்றி தமிழ் திரைப்படத் துறைக்கு வெற்றிப் பாதையாக அமையும். யானை படத்தில் சண்டை காட்சிகளை ஒரே நாளில் அருண் விஜய் முடித்தார். படத்தில் அனைத்து நடிகர்களும் கொடுத்த கதாபாத்திரங்களை மிக சிறப்பாகச் செய்துள்ளனர். யானை படத்தில் அருண் விஜயின் திறமை முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கடினமாக காட்சிகள் ஒரே நாளில் படமாக்கப்பட்டது. யதார்த்தமான கதையை கொண்டு யானை படம் எடுக்கப்பட்டது. சிங்கம் படத்தின் தொடர்ச்சி இப்போதைக்கு எடுக்க எந்தவொரு திட்டமும் இல்லை” என்றார்.

நடிகர் அருண் விஜய் கூறுகையில், “நீண்ட நாட்களுக்குப் பின் ஹரியுடன் இணைந்துள்ளேன். காட்சிக்குத் தேவையான நடிப்பை புரியவைத்தார். ஹரியுடன் இணைந்தது மறக்க முடியாத நிகழ்வு. விக்டர் கதாபாத்திரம் எனக்குப் பிடித்த கதாபாத்திரம். விக்டர் கதாபாத்திரத்தை தனியாக படமாக எடுக்க உள்ளோம். தமிழ் சினிமாவில் நான் எதிர்பார்க்கும் இடத்தை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது. தமிழ் திரைப்படத் துறையில் பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்க வேண்டும். யானை படத்திற்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளிப்பார்கள். கதாப்பாத்திரத்தை தேர்வு செய்வதில் நான் ஒரு மேஷ்திரியாக இருப்பேன், என்னை அறிந்தால் “விக்டர்” போல் ஒரு வலுவான வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் நடிக்கத் தயார். பான் இந்தியா படம் போல விக்ரம் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.