மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத் தக்கது என்றும் இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனித்தன்மை…

தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத் தக்கது என்றும் இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தனித்தன்மை நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு மதுரை, எம்.கே.புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017-18 ஆம் ஆண் டில் சட்டசபையில் தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிந்து சமவெளி நாகரீகம், பழமையான நாகரீகம் கீழடி போன்ற தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் விதமாக நூலகங்கள் அமைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 3 ஆண்டுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை சார்பில் அறிவிக்கப்பட்டதன் படி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் காட்சியங்கள் அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், 7 சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் இசை, நடனம் ஆகியவைக்கு தஞ்சையிலும், நாட்டுப்புற கலை நூலகம் மதுரை யிலும், தமிழ் மருத்துவ நூலகம் நெல்லையிலும், பழங்குடி கலாச்சார நூலகம் நீலகிரியிலும், கணிதம் மற்றும் அறிவியல் நூலகம் திருச்சியிலும், அச்சுக்கலை நூலகம் சென்னையிலும், வானியல் நூலகம் கோவையிலும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடப்பதால் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது என கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன்தரும். என கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.