வன்னியருக்கான 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது எனவும், 20% ஒதுக்கீட்டில், 68 சாதிகள் கொண்ட சீர்மரபினருக்கு 7.5% வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5% வழங்கினால் எம்பிசியில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5% ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
10.5% வன்னியர்களுக்கு ஒதுக்கியதற்கான அளவுகோல்கள் விளக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், உள் ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதால் தற்காலிக மாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.








