அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை கைவிட்டதா பாஜக?

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல்…

அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  காங்கிரஸ்,  திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி அமைத்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக நீடித்துவந்த அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது.  அதிமுக தலைவர்கள் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே இரண்டரை ஆண்டுகளாக நீடித்த உரசல்கள், விமர்சனங்கள், க ருத்து மோதல்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது.

ஆனால் கடந்த 2 மாதங்களாக அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி செய்து வந்தது.  அதிமுகவுடனான கூட்டணிக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.  மேலும்,  அதிமுகவுடனான கூட்டணிக்கு கதவுகள் மட்டுமல்ல ஜன்னல்களும் திறந்தே இருக்கின்றன என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  தனது என் மண் என் மக்கள் பயணத்தின் போது நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

ஆனால்,  அதிமுக தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லை.  மேலும்,  சுதந்திரமாக இருக்கவே,  தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இழுபறி காரணமாக அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சியை பாஜக கைவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.