மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?

இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த மணிப்பூர் வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் சுவடுகள் மறையும் முன்பே ஹரியானா மாநிலம் பெரும் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மே மாதம்…

இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த மணிப்பூர் வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் சுவடுகள் மறையும் முன்பே ஹரியானா மாநிலம் பெரும் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

மே மாதம் 3ம் தேதி தொடங்கிய மணிப்பூர் கலவரம் பெரும் வன்முறையாக மாறி இரண்டு மாதங்கள் நீடித்த நிலையில் நூற்றுக்கணக்கானோரை பலி கொடுத்து , ஆயிரக்கணக்கானோரை நிற்கதியாக்கி இருக்கிறது. நாடாளுமன்ற மழை கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் பெரும் விவாதப் பொருளானது.மணிப்பூர் விவகாரத்தின் சுவடுகள் இன்னும் மறையாத நிலையில் அடுத்ததாக ஹரியானா மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது ஹரியானாவில்..??

ஹரியானா மாநிலம்  நூஹ் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ எனும் பெயரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணி குருகிராம் பகுதியில் உள்ள அனைத்துக் கோயில்களையும் சென்றடையும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பேரணியை குருகிராம் பாஜக மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கிவைத்தார்.

பேரணி தொடங்கி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது சில சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஊர்வலக்காரர்களை நோக்கி கற்களை வீசியதாகவும் இதனையடுத்து பேரணி நடத்தியோருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இதனையடுத்து வன்முறை நீடித்த நிலையில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் , பைக்குகள் தீவைக்கப்பட்டுள்ளன. நூஹ் பகுதிவாசிகளின் வீடுகள் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளன. நிலைமை மோசமடைந்ததும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது.

கண்ணீர் புகை வீச்சு , காவலர்கள் மீது தாக்குதல்…,

காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும் , தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் காவலர்கள் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் இதுவரை ஊர்க்காவல்படையைச் சேர்ந்த நீரஜ் மற்றும் குர்சேவக் ,  குருகாம் அஞ்சுமான் மசூதியின் துணை மதகுரு முகமது ஹாபிஸ் சயீத் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளன.  பெண்கள் குழந்தைகள் உட்பட 2,500க்கும் மேற்பட்டோர்   அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரத்திற்கு காரணமான வீடியோ..!

ஹரியானா கலவரத்திரற்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஒரு வீடியோதான். கடந்த பிப்ரவரி மாதம் பிவானி மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களின் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மோனு மானேசர் என்பவர் தானும் ”ஜலாபிஷேக யாத்ரா” ஊர்வலத்தில் பங்கெடுக்க உள்ளேன் என சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் பின்னர்தான் பதற்றம் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. மோனு மானேசர் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கடங்காத கலவரம் : மத்திய படைகள் வருகை ..!

கலவரம்., தீவைப்பு என தொடங்கிய பதற்றம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. குருகிராமுக்கு அருகில் உள்ள மாவட்டங்களான பரிதாபாத் உட்பட பல இடங்களுக்கு பரவியதால் காவல்துறை பல இடங்களில் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவையை துண்டித்தது. கலவரத்தின் பின்னனியில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வெறுப்பு செய்திகள்தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

கலவரத்தை கட்டுப்படுத்த ஹரியானா மாநில முதலமைச்சர் மனோஹர்லால் கட்டார் மத்திய படை மற்றும் துணை ராணுவ படைகளை அனுப்புமாறு மத்திய அரசிட கேட்டுகொண்டார். இதனையடுத்து 20 கம்பெனி மத்திய படைகள் வந்திறங்கின. அவற்றில் 14 படைகள் நூஹ் மாவட்டத்திலும்,  3 படைகள் பல்வாலிலும், 2 படைகள்  குருகிராமிலும், ஒன்று ஃபரிதாபாத்திலும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 119க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் குர்கான் எம்பி சந்திப்பு :

ஹரியானா கலவரம் தொடர்பாக குர்கான் எம்பியும் மத்திய அமைச்சருமான ராவ் இந்திரஜித் சிங் பிரதமர் மோடியைச் சந்தித்தார். ”கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரிடையேயும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது வெளியில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல இவர்களுக்கு யார் அனுமதித்தது..? இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது” என இந்திரஜித் சிங் தெரிவித்தார்.

கலவரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிந்த பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், கலவரம் நடைபெற்ற பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.

அமைதி திரும்ப வலியுறுத்தி இருதரப்பு பேச்சுவார்த்தை :

ஹர்யானாவில் ஏற்பட்ட கலவரத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் குர்கானில் உள்ள சோனா நிர்வாகத்தின் சார்பில் இருதரப்பின் முக்கியஸ்தர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சு வார்த்தையில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் நிசாந்த் குமார் யாதவ் இருதரப்பினரிடையே அமைதியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார்.

-ச.அகமது, நியூஸ்7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.