சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ் நாடு மின் வாரிய தலைமை செயலகத்தில் இருந்து 10 மேற்பட்ட கணினி ஹார்டு டிஸ்குகள் திடீரென மாயமாகின. டெண்டர் ஆவணங்கள், நிலக்கரி கொள்முதல் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கம்ப்யூட்டர்களை மேற்பார்வையிடும் ஒப்பந்த ஊழியரான கோபிநாத் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஹார்டு டிஸ்க்குகளை அவர் பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு விற்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பெங்களூரு விரைந்த போலீசார் 34 ஹார்டு டிஸ்குகளை மீட்டனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக பெங்களூருவில் கணினி கருவிகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் முரளி மனோகா் (32) என்பவரும் கைது செய்யப்படார். தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹார்டு டிஸ்க்குகள் மாயமானது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.




