அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – மத்திய அரசுக்கு இந்தியா கூட்டணி வலியுறுத்தல்…!

நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க மத்திய அரசு உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று இந்தியா கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

புது தில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரச் உள்ளிட்ட 23 கட்சிகள் பங்கேற்றன. காங்கிரஸ் உடனான மோதல் காரணமாக திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் ஐந்து முக்கிய அம்சங்களில் ஒருமித்த கருத்தை எட்டினோம். அந்தப் பிரச்சினைகளுக்காகப் போராடுவோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “எஸ்.ஐ.ஆர், வாக்காளர் உரிமை பறிப்பு மற்றும் ‘தேர்தல் திருட்டு’ எனக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பாக இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுத எதிர்க்கட்சிக் கூட்டணி ஒருமனதாக ஒப்புக்கொண்டன. அந்தக் கடிதம் விரைவில் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றும் கார்கே கூறினார்.

மேலும் பேசிய அவர், “நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டனர். இதனால் மத்திய கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஒருமனதாகக் கோரியுள்ளோம். இந்திய கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்த ஒப்பக்கொள்ளப்பட்டது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும்.

நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல், வேலையின்மை, விலை உயர்வு, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் மக்கள் சார்ந்த பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது தினமும் காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடைபெறும்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.