“இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்” – எடப்பாடி பழனிசாமி!

தைப்பூச திருநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருநாளையொட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்,

அறமும் வீரமும் இணைந்த தெய்வ வடிவமாக போற்றப்படும் வேலவன் அருளால்,
“வேலுண்டு வினையில்லை” என்பதற்கு ஏற்ப வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள், இந்த தைப்பூசம் திருநாள்.

வேல் ஏந்தி தீமைகளை அகற்றி, அன்பும் கருணையும் அருளும் முருகப் பெருமானின் பூரண அருளால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் வாழ்வு மலரட்டும். வெற்றிகள் தொடரட்டும். தீமையின் பிடியில் இருந்து தமிழகம் மீளட்டும். கந்தனின் அருளால், தமிழ்நாடு உயர்ந்து ஒளிரட்டும்.

தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக எனது தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தமையை உள்ளார்ந்த பெருமிதத்தோடு நினைவுகூர்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.