அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவிக நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எனது இல்லத்தில் சோதனை என்றார்கள் எனக்குத் தெரிந்த ரெயிட் எல்லாம் Cycle Ride, Horse ride, Elephant ride தான் மற்றபடி எந்த சோதனையும் நடைபெறவில்லை எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கான இலவச பேருந்தில் மற்ற மாநிலங்களில் புது பேருந்துகள் வாங்கி தான் திட்டத்தைச் செயல்படுத்துவார்கள். ஆனால், இங்குப் பழைய பேருந்துக்கு முன்புறம் மட்டும் பெயிண்ட் அடித்துவிட்டு விட்டிருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், பத்து சதவிகிதம் கூட பிங் பேருந்து இயங்கவில்லை எனத் தெரிவித்த அவர், பெண்களை ஏமாற்றுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்துவிட்டு டிடிவியை தனியாகச் சந்தித்துப் பேசினார், நரிகளின் சாயம் வெளுத்துப் போய்விட்டது எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்’
சசிகலாவுடன் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்த அவர், நேற்று, இன்று, என்றைக்குமே சசிகலாவுடன் இணைய வாய்ப்பில்லை எனக் கூறினார். மேலும், டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் இணையலாம். ஆனால் அவர்களை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, கூட்டுப் பலாத்காரம் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்த அவர், தற்போது துக்ளக் அரசாங்கம் நடைபெற்று வருவதாகவும், போதைப்பொருட்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், நடிகர் ரஜினி ஆளுநர் சந்திப்பு தொடர்பாகப் பேசிய அவர் அரசியல் இல்லாத உலகமே கிடையாது. அவர் என்ன மாதிரியான அரசியல் பேசினார் என ரஜினியிடம் கேளுங்கள் எனக் கூறினார். அதிமுக ஆட்சி இருந்திருந்தால் இதைவிட இன்னும் சிறப்பாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியிருப்போம் எனக் கூறினார்.








