ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்

ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்  கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி,…

ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்  கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி, ஹனுமன், நந்தி ஆகிய ஹிந்து தெய்வச் சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. கள ஆய்வின்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்மா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து பெண்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் சில காரணங்களால் ஆஜராக இயலாதது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக அமர்வு கூறியது. அதுவரை இது தொடர்பான வழக்கில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என, வாரணாசி நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. இனி வாரணாசி நீதிமன்றமே மசூதி வழக்கை விசாரிக்கும். இதனை, நீதித் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரணை நடத்த வேண்டும். மசூதியில் உள்ள சிவலிங்கம் உள்ளதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் தொழுகை நடத்த சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கிறது. மசூதி வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆய்வு தொடர்பாக தகவல்கள் கசிவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 2வது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.