குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்த வழக்கில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த அக்டோபர் மாதம் பாலம் இடிந்து விழுந்ததில் 134 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்திற்கு பிறகு தலைமறைவான ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக குஜராத் காவல்துறை அறிவித்ததை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட்டை நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்தது.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி கடந்த ஜனவரி 20ஆம் தேதி மோர்பி அமர்வு நீதிமன்றத்தில் ஜெய்சுக் படேல் மனுதாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெய்சுக் படேல் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கில் அஜந்தா நிறுவனத்தின் (ஓரேவா குழுமம்) நான்கு ஊழியர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதும், குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி மோர்பி பாலம் விபத்து வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியதோடு, ஒரு வாரத்தில் விபத்து குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில உள்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.