குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1ம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறும் 89 சட்டப் பேரவை தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய குஜராத் சட்டப்பேரவை தேர்தல் களம், களை கட்டி வருகிறது. 182 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள சுமார் 5 கோடி வாக்காளர்களில், 50 சதவீதத்தினர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்களில் 167 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 100 பேர் மீது கொலை மற்றும் பாலியல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
முதற்கட்ட தேர்தலில் வைர நகரம் என்று அழைக்கப்படுகிற தொழில் நகரான சூரத் பகுதி முக்கிய இடம் பிடிக்கிறது. இங்கிருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள். குஜராத்தில் 1995-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 27 ஆண்டுகளாக, பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை மீண்டும் ஆட்சியமைத்து இடதுசாரிகளின் மேற்கு வங்க மாநில சாதனையை சமன் செய்ய முயல்கிறது ஆளும் பாஜக. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாடாளுமன்ற தேர்தலைப் போல் ஒட்டு மொத்த பாஜகவினரும் குஜராத்தில் களமிறங்கி தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் கை நழுவிய வெற்றி வாய்ப்பை, இம்முறை எப்படியும் பிடித்தே தீர்வது என்ற முனைப்புடன் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. குஜராத்தில் ஆட்சியமைத்தால் சரிவிலிருக்கும் கட்சியை தூக்கி நிறுத்துவதற்கும், 2024 மக்களவை தேர்தலில் புதிய உத்வேகத்துடன் செல்லவும் பலனளிக்கும் என கருதி எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக போராடி வருகிறது. மேலும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸுக்கு உதவும் என்று எதிர்பார்க்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
டெல்லி, பஞ்சாபைத் தொடர்ந்து குஜராத்தையும், கைப்பற்றி பாஜக, காங்கிரஸ் என்ற வரிசையில் இடம் பிடிக்க முனைப்பு காட்டி தீவிரமாக செயல்பட்டு வருகிறது ஆம் ஆத்மி. அக்கட்சியின் பிரச்சாரங்களில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் மானும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச கல்வி, இலவச சைக்கிள்கள், இலவச மின்சார ஸ்கூட்டர், இலவச பேருந்து வசதி, இலவச கல்லூரி கல்வி, கடன் தள்ளுபடி என இலவசங்களின் அறிவிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தன.
குஜராத்தில் ஆட்சியமைத்து, 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான யுக்தியை வகுக்கும் வாய்ப்பு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பதை, வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 8ம் தேதி தெரியவரும்.