ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கும் முழு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்குமா? நிதி நெருக்கடிக்கு தீர்வு காணுமா என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில், ஒவ்வொரு…

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கும் முழு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்குமா? நிதி நெருக்கடிக்கு தீர்வு காணுமா என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற வகையில், வெவ்வேறு விகிதங்களில், வரி விதிப்பு முறைகள் இருந்தன. இதனால் வர்த்தகம் மற்றும் தொழில் துறையினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இதை களைய நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைகளை கட்டமைக்க வேண்டும் கருத்து உருவானது.

பல ஆண்டுகளாக மத்திய – மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள், அதிகாரிகள், வரியியல் நிபுணர்கள், தொழில் துறையினர் ஒன்று கூடி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரே நாடு, ஒரே வரி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி முடிவெடுக்கப்பட்டாலும் பல காரணங்களால் அமல்படுத்தப்படுவது ஒத்திபோடப்பட்டு வந்தது. 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகமானது.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோதே அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், மாநிலத்தில் வரி விதிப்பு அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும் அப்போதைய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவைப் போலவே, திமுகவும் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த , மோகித் மினரல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அண்மையில் வழங்கிய தீர்ப்பில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது எனவும், பரிந்துரைகள் ஒரு தூண்டுகோல்தான் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி சார்ந்த விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சமமான அதிகாரங்கள் உள்ளது என்றும், இந்திய கூட்டாட்சி என்பது மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்திருப்பது தான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில், பரிந்துரைகளை வழங்கலாம், ஆனால் மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு, ஜி.எஸ்.டி. விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய,மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு, ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும் – என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து பட்டய கணக்காளர்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த வழக்குரைஞர்கள், ஜிஎஸ்டி கவுன்சில் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்த்தது தான் என குறிப்பிட்டனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டங்களில் இனி மாநிலங்களின் குரல் எடுபடும், வரியை குறைக்கும் போதும், அதிகரிக்கும் போதும் இனி மத்திய அரசு தானாக முடிவெடுக்காது என்றும் தெரிவித்தனர். என்ன தான் மாநில அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு என்றாலும், ஜிஎஸ்டி அறிமுகமாகி ஐந்தாண்டுகள் முடிவடைவதால், வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி வசூலில் பங்கு எதுவும் வழங்கப்படாது என்பது நிதர்சனம். இனி மாநில அரசுகள் நிதி இழப்பீட்டை எப்படி சமாளிக்கப்போகிறது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே பல்வேறு விதமான நிதிசார் சிக்கல்களில் உள்ள மாநில அரசுகள் எப்படி நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும், இந்த நிதி சவால்கள் , ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான பொதுமக்கள் மீது தான் மீண்டும் விழும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள் . என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.