கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பெற்றோர் அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக, பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 29ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், திட்டங்களை செயல்படுத்த குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில், நிதித்துறைச் செயலாளரை தலைவராகவும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர், சமூக நலத்துறை ஆணையரை உறுப்பினர்களாக கொண்டு, குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இருவரை, குழுவில் இணைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.







