முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி: கமல் கோரிக்கை

பன்னிரெண்டு ஆண்டுகளாக தவிக்கும் தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2009-ஆம் ஆண்டு கன்னியாகுமரி அருகே உள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், தீர்த்தம் எனும் பெயருள்ள விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட புயலில் கர்நாடக–கேரள பகுதிகளுக்கு இடையே நடுக்கடலில் சிக்கி மீனவர்கள் மாயமாகினர்.

மீனவர்கள் தாசன், ராஜன், அனிஷ், நோமான்ஸ், ஸ்டாலின், கிளீட்டஸ், கிம்மி குட்டன் ஆகியோர் பியான் புயலால் காணமால் போய் 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

இந்திய ஆதாரச் சட்டம் (1872)-ன் படி ஒருவர் காணவில்லை என்றால், 7 ஆண்டுகள் கழித்துதான் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். அந்த இறப்புச் சான்றிதழைக் கொண்டே நிவாரண உதவிகளுக்கு முயற்சிக்க முடியும். தூத்தூர் மீனவர்கள் கடலில் மாயமாகி 12 ஆண்டுகளாகியும் இன்றுவரை இறப்புச் சான்றிதழ் கூட பெற முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் அலைக்கழிக்கப் படுகிறார்கள்.

குடும்பத்தில் பொருளீட்டும் உறுப்பினரை இழந்து இத்தனை ஆண்டுகளான பின்னரும் எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்பது பெருந்துயரம். இவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கடலுக்குள் மாயமானவர்களுக்கான இறப்புச் சான்றிதழுக்கான கால அவகாசம் மிக நீண்ட காலமாக இருக்கிறது. இந்த நடைமுறையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இறப்புச் சான்றிதழுக்கான கால அவகாசம் குறைக்கப்பட வேண்டும். ஒருவர் கடலில் காணாமல் போனால், அவரது குடும்பத்திற்கான உடனடி உதவிகள் 15 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட பியான் பேரிடர் நடந்தபோது திமுக ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகேனும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்திருக்கும் தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி உடனே கிடைக்க ஆவன செய்யும்படி தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?

Jeba Arul Robinson

“கொரோனா தடுப்பூசிகளால் இரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படாது” -டிசிஜிஐ!

Halley karthi

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Halley karthi