பூஸ்டர் தடுப்பூசி கால இடைவெளி: முடிவு எடுக்கப்படவில்லை

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்கும் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 2 டோஸ்…

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை குறைக்கும் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு மூன்றாவது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் இந்தத் தடுப்பூசி, கொரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில் உள்ளது. இதனிடையே, பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்க தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

18 வயதுக்கு மேற்பட்டோரில் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், முன்னெச்சரிக்கை டோஸ் குறித்தும் ஏராளமான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக, மூன்றாவது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கால இடைவெளியை குறைப்பது தொடர்பாக தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோனைக் குழு கூட்டத்தில் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று ஏ.என்.ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் கொரோனா வைரஸ் மீதான தேசிய பணிக்குழு இணை தலைவர் மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன், “இரண்டாவது மற்றும் முன்னெச்சரிக்கை டோஸ்க்கான நீண்ட கால இடைவெளி என்பது, தொற்று எண்ணிக்கையை குறைப்பதுடன் நோயின் தீவிரத்தன்மையையும் குறைக்கிறது. எங்களது ஆய்வுப்படி, ஒருவர் இரண்டாவது டோஸ் போட்ட குறுகிய காலத்திலேயே இதையும் செலுத்திக் கொண்டால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது டோஸ் மூலம் அவர் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டவராக இருப்பார்.

அவருக்கு உடனடியாக மூன்றாவது டோஸ் செலுத்துவது மூலம் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. அதேநேரத்தில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதம் அல்லது அதற்கு மேல் நீண்ட காலம் காத்திருப்பவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும்போது அது நல்ல முடிவுகளை கொடுக்கிறது.” என்று கூறியுள்ளார். ஏப்ரல் 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி தனியார் மையங்களிலும் செலுத்தப்படுகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 96 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியும், 83 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.