பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலை (Mobile Incinerator Plant) தொடங்கப்பட்டுள்ளது. சில பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்புடைமை நிதியின் கீழ் வழங்கிய ரூ.2.10 கோடியில் வாங்கப்பட்ட குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னையில் திடக்கழிவுகள் உருவாகும் இடங்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அழிப்பது தான் மாநகராட்சியின் திட்டமாகும். ஆனால், இது மிக மோசமான, ஆபத்தான முயற்சியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எரியூட்டும் நடமாடும் ஆலைகளில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10 நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் வெளியாகும். இவற்றில் பெரும்பான்மையானவை மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; காற்றில் அழியாத தன்மை கொண்ட இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அன்புமணி, போபால் நகரில் விஷவாயு கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரியூட்டும் நடமாடும் ஆலைகளால் படிப்படியாக ஏற்படும் என்று அச்சம் தெரிவித்தார்.பிளாஸ்டிக் குப்பைகளை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி மூட வேண்டும்; புதிய ஆலைகளையும் இனிமேல் தொடங்கக்கூடாது. ,பூஜ்ய குப்பை (Zero Waste) எனப்படும் குப்பையில்லாழ மாநகர கோட்பாட்டையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.