பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், மத்திய அரசுதான் எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இலங்கை மக்களுக்கு உதவ விசிக சார்பில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்க உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் ஆளுநரால் இன்னும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆளுநர் தமிழக சட்டப்பேரவையில் இயற்றும் சட்ட மசோதாக்களை இவ்வாறாகக் கிடப்பில் போடுவது வேதனையளிப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் தான் விலை உயர்வுக்கு காரணம் எனவும் சாடினார்.மேலும்,மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் மட்டுமே இந்த அளவிற்கு விலைவாசி உயர்வது போன்ற தோற்றத்தை பிரதமர் ஏற்படுத்துகிறார் எனவும் இந்த பிரச்சாரத்தை பாஜக கைவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்.







