ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பது – ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பதே  என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.  சென்னை ஆளுநர் மாளிகையில் குடிமையியல் பணிக்கான தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சட்டசபையில்…

ஆளுநரின் பொறுப்பு அரசியலமைப்பை பாதுகாப்பதே  என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

சென்னை ஆளுநர் மாளிகையில் குடிமையியல் பணிக்கான தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சட்டசபையில் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் இருப்பதற்கு நாகரிகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200-வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம்.

இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது மசோதா மீதான முடிவை எடுக்க குடியரசு தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம். ஆளுநர் மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்த காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அது குறித்த முடிவை தான் எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசு தலைவர் என்பதால் அதை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார்.

குடியரசு தலைவர் அத்தகைய மசோதா மீது முடிவெடுக்க இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தலாம். ஒன்று அவர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவார். இரண்டாவதாக அதை நிறுத்தி வைப்பார்.விதிவிலக்காக இரண்டு வித மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று அன்றாட செலவினம் தொடர்பான பண மசோதா. 2வது சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றியதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம்.

அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அது தான் ஆளுநரின் அரசியலமைப்பு நிலைப்பாடு. அரசியல்ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர், அரசியல்ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும்.

அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசு தலைவர். அந்த வகையில் குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர். இதை அரசியலமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதில் எந்த பிரச்னையும் எழவில்லை. உங்களுடைய கடமையை நீங்கள் சரியாக ஆற்ற வேண்டும். அவ்வளவுதான் என ஆளுநர் ரவி பதிலளித்தார்.

மேலும், மத்திய அரசின் அதிகாரம் என்ன? மாநில அரசு என்னென்ன சட்டங்களை இயற்றலாம்? என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஒத்திசைவு பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றாவிட்டாலும் மாநில அரசே சட்டமியற்றலாம். ஒருவேளை மத்திய அரசு இயற்றிய சட்டம் போல மாநில அரசு சட்டம் இயற்றினாலும் அது மத்திய சட்டத்துக்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஒரு கட்சிக்கு முழு பெரும்பான்மை இருப்பதை வைத்து அந்த கட்சி ஆளும் அரசு எந்த மசோதாவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதற்கு சட்ட அனுமதி வழங்கும் இடத்தில் தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது.

ஆளுநரின் பணி, அந்த இயற்றப்பட்ட மசோதா மாநில அரசுக்குரிய அதிகார வரம்பை மீறாத வகையில் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆகும். ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்பை பாதுகாப்பது ஆகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.