நீட் தேர்வு சட்ட விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என தேர்தல் பரப்புரையின் போது வாக்குறுதி வழங்கியது திமுக. அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை நியமித்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.
அதன்பிறகு அந்தக் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றி அதைனை தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. ஆனால், அந்த மசோதாவை பரிசீலனை செய்வதாகக் கூறி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 142 நாட்களுக்குப் பிறகு அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். அதில், போதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு மீண்டும் நீட் விலக்கு மசோதா கடந்த மார்ச் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அண்மைச் செய்தி: 5வது வெற்றியை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்
அதன்பிறகு நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கூறி, மீண்டும் தமிழ்நாடு ஆளுநருக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தினார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆளுநரின் தேநீர் விருந்தை முதலமைச்சர் புறக்கணித்தார். விசிக, மதிமுக உட்பட பல முக்கிய கட்சிகளும் புறக்கணிப்பில் ஈடுபட்டன.
இந்நிலையில், ‘நீட் தேர்வு சட்ட விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநர் மாளிகை முடிவு செய்துள்ளதாக’ தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் செயலகம் மூலம், தமிழ்நாடு முதலமைச்சருக்கு முறைப்படி ஓரிரு நாட்களில் தகவல் தெரிவிக்கப்படும் என ஆளுநர் தரப்பு கூறப்படுகிறது.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியாலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







