சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி என கடந்த 14ஆம் தேதியில் இருந்து நான்கு…

தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி என கடந்த 14ஆம் தேதியில் இருந்து நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளியூர்களிலிருந்து சென்னையில் தங்கி பணி புரியும் ஊழியர்கள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் என பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு தமிழ் புத்தாண்டு, மற்றும் புனித வெள்ளி பண்டிகைகளை கொண்டாட சென்றனர்.

இதனிடையே மதுரையில் உலகப்புகழ்பெற்ற சித்திரைத்திருவிழாவும் நடைபெற்று வந்ததால், மதுரை மற்றும் அதைனை சுற்றிய ஊர் மக்களும் இந்த முறை கூடுதலாக சொந்த ஊர்களில் குவிந்தனர். இந்த நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்ததால் வெளியூர் பயணிகள் மீண்டும் பணிக்கு திரும்ப சென்னைக்கு படையெடுத்தனர். தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் திரும்பினர்.

வழக்கமாக வெளியூர்வாசிகள் வார இறுதியில் வரும் விடுமுறை நாட்களை தங்கள் சொந்த ஊர்களில் செல்வது வழக்கம். இதன்காரணமாக வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

இந்நிலையில், இந்த முறை  தொடர் விடுமுறை மற்றும் மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்டவை முடிந்து வெளியூர்களிலிருந்து மக்கள் நேற்று சென்னைக்கு படையெடுத்தனர். இதனால்  நேற்று இரவிலிருந்து செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் பரனூர் சுங்கச்சாவடியில் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.