நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாக உள்ளது என எம்.பி. தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கக் கூடியதாக, ஜனநாயகத்தை நசுக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவித்தார். மேலும், 12-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள் எனத் தெரிவித்த அவர், பா.ஜ.க அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவை சான்றாக இருந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணம் திரும்பப் பெற்றனர் எனக் கூறினார். மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்கக் கூடிய கூட்டத் தொடராக இந்தக் கூட்டத்தொடர் இருந்தது எனத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதாகக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘‘44வது செஸ் ஒலிம்பியாட்; மாபெரும் வெற்றி!’ – அமைச்சர் மெய்ய நாதன்’
பீகாரில் பா.ஜ.க.விற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ள அவர், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால், ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கான இணைப்பு போக்கை உருவாக்க வேண்டியது தான். ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக முழு நேர அரசியல்வாதியாகச் செயல்படுகிறார். அவரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்லாமல் தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது எனக் கூறினார்.








