44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வீரர்கள் இன்று சாதித்து உள்ளார்கள், மிக அருமையான மாபெரும் வெற்றியையும் பதக்கங்களையும் குவித்திருக்கிறார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன் என விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்ய நாதன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்குச் சர்வதேச தரத்தில் இந்த விழாவை நடத்தி வெற்றி கண்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 187 நாடுகளில் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள், கலந்துகொண்ட இந்த போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்தி சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறினார். இதற்கு முன்பு இதுபோல ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது இல்லை எனத் தெரிவித்த அவர், இனிமேலும் நடைபெறப் போவதுமில்லை எனக் கூறினார். மேலும், செஸ் வீரர்கள், உலக செஸ் கூட்டமைப்பின் சான்றோர்கள் என அனைவரும் பாராட்டிப் புகழ்ந்து உள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், இது முதலமைச்சரின் பணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி எனத் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து வந்த வீரர்கள் எந்த மாதிரி வரவேற்று அவரை தங்க வைத்தோமோ அதுபோல அவர்களைப் பாதுகாப்பாக அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாடு வீரர்கள் இன்று சாதித்து உள்ளார்கள், மிக அருமையான மாபெரும் வெற்றியையும், பதக்கங்களையும் குவித்திருக்கிறார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் எனக் கூறினார்.








