குற்றலாம் சரால் திருவிழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டுப்புற கலைஞர்களின் அரங்கேற்றம் மற்றும் புத்தகக்கண்காட்சி என களைகட்டி வருகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரல் திருவிழாவானது கடந்த 3 வருடங்களாக நடைபெறாத சூழலில் இந்த வருடம் மிக சிறப்பாக நடத்த
திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக சாரல் திருவிழா தொடங்கியது.
5வது நாளான நேற்று குற்றாலம் கலைவாணர் அரங்கில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கிராமிய கலைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றனர். தொடர்ந்து தேவராட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் கேரளா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்று பாரம்பரியத்தை உணர்த்தும் கலைகளை பரவசத்துடன் கண்டு களித்தனர்.
அதேபோல் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக பிரபல நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் லியோனி தலைமையில் தமிழர் பண்பாடு பழமையே, புதுமையே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பேச்சாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மேலும் புத்தககண்காட்சியில் பங்கேற்று ரூ.1000 க்கும் மேல் புத்தகங்களை வாங்கிய நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் இந்த சாரல் திருவிழா நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்காக தென்காசி கோபுர வாசல் முன்பும் குற்றாலம் மெயின் அருவி பகுதியிலும் led டிவிகள் மூலம் கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-இரா.நம்பிராஜன்








