”ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்” – இரா.முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சார்பாக செயல்பட்டு, போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஏஐடியுசியின் 20வது மாநில மாநாடு கடந்த…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சார்பாக செயல்பட்டு, போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஏஐடியுசியின் 20வது மாநில மாநாடு கடந்த
ஒன்றாம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவாக ஏஐடியுசியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாநில தலைவராக காசி விசுவநாதனும், மாநில பொதுச்செயலாளராக ராதாகிருஷ்ணன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதவி காலம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் எனவும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிர்வாகிகளை அறிமுகம் செய்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் வாயிலாக பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டிக்கும் வகையிலும், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் டிசம்பர் 30ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருப்பதற்கு, ஏஐடியூசி முழு ஆதரவளித்து அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் பங்கேற்க போவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்திய நாட்டை ஆட்சி செய்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் 33 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. அதேபோல் லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களும், இந்திரா காந்தி காலத்தில் 66 பொதுத்துறை நிறுவனங்களும், ராஜீவ் காந்தி காலத்தில் 16 பொதுத்துறை நிறுவனங்களும், பிபிசி காலத்தில் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களும், நரசிம்மராவ் காலத்தில் 14 பொதுத் துறை நிறுவனங்களும், ஐகேகுஜரால் காலத்தில் மூன்று பொதுத் தேர்வு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டது.

வாஜ்பாய் காலத்தில் ஏழு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு ஏழும் விற்பனை செய்யப்பட்டது. மத்திய பாஜக அரசு ஆட்சி செய்யும் 8 ஆண்டுகளில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தையும் உருவாக்காமல், 23 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயம் என நேரு சொன்னார். ஆனால் தற்போதைய ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரத்தம் சிந்தி பலர் உயிர்மீது தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தொழிலாளர்களின் நலன் சார்ந்த 44 சட்டங்களை மோடி அரசு நான்கு சட்ட தொகுப்புகளாக சுருக்கி உள்ளது.

வெள்ளையர் ஆட்சி காலத்தில் கூட தொழிலாளர்கள் நலச்சங்கம் செயல்பட்டன. ஆனால் தற்போதைய மோடி அரசின் காலத்தில் தொழிலாளர் சங்கங்கள் நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. தமிழக அரசு, மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை அமல் செய்யக்கூடாது என ஜனவரி 24ஆம் தேதி மாநில தலைமையளவில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. மோடி அரசை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என இந்த
மாநாட்டில் அரசியல் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழப்பது அதிகம் படித்தவர்களும் அரசு அதிகாரிகளுமாக உள்ளனர். தமிழக ஆளுநர் மக்கள் நலன் சார்ந்த சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்றாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். தமிழக அரசு கொடுத்த தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கொடுத்த மனுவிற்கு பதில் கேட்டு 24 மணி நேரத்தில் ஆளுநர்
கடிதம் எழுதுகிறார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சென்ற லிஃப்ட் பழுது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசிற்கும் கவர்னருக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் நடப்பதாக அறிகிறோம். ஆனால் அந்தப் பிரச்னைகள் குறித்தான முடிவுகளை பார்ப்பதை விட்டுவிட்டு, தமிழக பிரச்னைகளில் தலையிடுவதில் தமிழசை சௌந்தரராஜனுக்கு என்ன ஆர்வம் எனத் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.