தமிழ்நாடு அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பில் 4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையை நாடியதாக தெரிவித்தார்.
மேலும், ஆக்சிஜன் தேவைபடுகின்றோர் 5 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், 33,46,000 இலக்கில் 26 லட்சத்திற்கும் மேல் இளம் சிறாருக்கு தடுப்பூசி செலுத்த பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 80% மேல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது
மேலும், தமிழ்நாடு அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை எனக்கூறிய அவர், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை ஆளுநர் புரிந்து கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு எதிர்ப்பு தெரிவிக்கிறது எனக்குறிப்பிட்ட அமைச்சர், நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியான வாய்ப்புகளை அரசு முன்னெடுக்கம் என கூறினார். மேலும், பாஜக அரசு தான் நீட் அறிக்கையை அறிவித்தார்கள், அவர்களே இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.







