தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை தெரிவித்திருப்பதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த இந்திய வெளியுறவுத்துறையை சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரிகள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர். அப்போது, ஆளுநர் அவர்களிடம் தமிழ்நாடு அரசின் மீது தனக்குள்ள அதிருப்தியை தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்ததும், நியூஸ் 7 தமிழ் முதலில் நேற்று செய்தியாக பதிவு செய்தது.
இந்நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பதவிக்குரிய பொறுப்புணர்ந்து செயல்படுவதில் பல நேரங்களில் தடம் புரளுகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தேவையற்ற விவகாரங்களில் அடிக்கடித் தலையிட்டு, தனது ஆற்றலையும் அறிவையும் காட்டுவதாக எண்ணி தாறுமாறாகப் பேசி, தமிழ் மக்களின் உணர்வோடு விளையாடத் தொடங்கியுள்ளார். எல்லை தாண்டி மூக்கை நுழைத்து நோட்டம் பார்க்கிறார் என முரசொலி குறிப்பிட்டுள்ளது.
நீங்கள் ஆளுநராக இருந்த மற்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாடு இல்லை. இது அரசியல் தெளிவுமிக்க மண். இதனைப் பலமுறை கூறிவிட்டோம் என்றும், ஆளுநர் ரவிக்கு இதில் சந்தேகம் இருந்தால், மாறுவேடத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி பயணம் செய்து பார்க்கலாம். அந்த ஆட்டோ ஓட்டுநர் ஆளுநருக்கு தெளிவான அரசியல் பாடம் நடத்திடும் அளவு அறிவாற்றல் பெற்றவர்.
ஆளுநர் ரவிக்கு நாம் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிக் காண்பிப்பதைக் கண்டு, மிரட்டுவதாக அவர் கருதிவிடக் கூடாது. தமிழக வரலாற்றின் பழைய பக்கங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ‘திராவிட மாடல்’ என்றதுமே சில ஆரியக் குஞ்சுகள் அலறித் துடிப்பது போல, தமிழக ஆளுநரும் அதுகண்டு மிரளுகிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் இப்போது கசிகிறது.
இதையும் படிக்க : வெளியுறவு துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்த ஆளுநர் ?
சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, பல்வேறு நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள், பின்னர் மரியாதை நிமித்தமாக ஆளுநர் ரவியைச் சந்தித்துள்ளனர். சந்தித்தவர்கள், தமிழ்நாடு, நாட்டிலேயே ஒரு முன்னேறிய மாநிலமாக உள்ளதைக் குறிப்பிட்டு, ஆளுநர் என்ற முறையில் அவரிடம் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆளுநருக்கு ‘திராவிட மாடல்’ என்ற சொல் வேப்பங்காயாகக் கசந்துள்ளது. திராவிட மாடலைக் குறித்து அவர்களிடம் விமர்சித்துள்ளார்.
குறள் குறித்து ஆளுநர் ரவி கூறிய கருத்து தமிழகத்தின் தமிழ்ப் பெருங்குடிமக்கள், ஆன்றோர், சான்றோர் எல்லாரையும், அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த வைத்துள்ளது. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் பல திக்குகளிலும் உருவாகிவரும் எதிர்ப்புகள் சிறு பொறிகளாக இன்று தெரியக்கூடும். சிறுபொறிகள்தான் பல நேரங்களில் பெருந்தீயாக மாறிவிடுகிறது. இன்று அதுபோன்று, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகத்தில் உருவாகியுள்ள சிறு பொறிகள், நாளை பெருந்தீயாக மாறாது என்பதற்கு, யாரும் எந்த உத்தரவாதமும் தர இயலாது. இது எச்சரிக்கை இல்லை என்றும் நிலைமை விளக்கம் என்றும் இதனை ஆளுநர் ரவி உணர வேண்டும் என்றும் முரசொலி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









