கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்- தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்

நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு…

நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார்.

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு கொலிஜியம்  பரிந்துரை எனும் முறை பயன்பாட்டில் உள்ளது. கொலிஜியம் என்பது   நீதிபதிகள் குழு இடம்பெற்றிருக்கிற ஒரு தன்னிச்சையான அமைப்பு. இந்த கொலீஜியத்தின் மூலம் புதிய நீதிபதிகளைத் தேர்வு, இடம் மாற்றம்  போன்ற பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரின்  ஒப்புதலைப் பெற்று அதற்கான அறிவிப்பை வெளியிடும். கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்கும் உரிமையும் மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், சுயேட்சையாக புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மத்திய அல்லது மாநில அரசுக்குக் கிடையாது.

நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறை பலதரப்பட்ட அரசியல் கட்சிகளால் சர்ச்சைக்குள்ளானது. கொலீஜியம் முறையின் மூலம்  சரியாக நீதிபதிகள் தேர்வு செய்யப்படவில்லை எனவும் கொலீஜியம் முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை எதிர்த்து தேசிய நீதிபதிகள் ஆணையத்தை மத்திய அரசு கடந்த 2015ல் கொண்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ கொலிஜியம் முறை குறித்து தொடர்ந்து தனது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..

“உச்ச நீதிமன்ற  கொலிஜியத்தில் மத்திய அரசுப் பிரதிநிதிகளும், உயர் நீதிமன்ற கொலிஜியத்தில் மாநில அரசுப் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். நீதிபதிகளின்  நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டுமெனில் கொலிஜியத்தில் அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறுவது  அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.