தம்மை தெலுங்கு இயக்குநர் என விமர்சித்தவர்களுக்கு வாரிசு படம் தான் பதில் என இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 11-ம் தேதி வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு பட குழுவினர் நன்றி தெரிவிக்க சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில், படக் குழுவை சேர்ந்த இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜ், நடிகர்கள் சரத்குமார், ஷியாம், சங்கீதா மற்றும் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேடையில் பேசிய இயக்குனர் வம்சி, நடிகர் விஜய் என்னை தமிழ் கற்றுக்கொள்ள சொல்லியுள்ளார். கட்டாயம் அடுத்த முறை பேசும் போது மிக சிறந்த தமிழ் மொழியில் பேசுவேன். என்னை சிலர் தெலுங்கு இயக்குநர் என விமர்சித்தனர். அவர்களுக்கு எல்லாம் இந்த படம் ஒரு பதில் என கூறினார்.
வாரிசு படம் அல்ல, நம்பிக்கை. இந்த நம்பிக்கையை நிஜமாக்கிய ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு இயக்குநர் என நீங்கள் சொல்லும்போது மனதில் ஒருபுறம் வலிக்கிறது. விஜய் சார் நிகழ்ச்சிக்கு வர வேண்டுமா என கேட்டபோது, நான் முதலில் நீங்கள் ’ஹாப்பியா’ என்று தான் கேட்டேன். அவர் மகிழ்ச்சி அடைந்ததே எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்று படத்தின் அனைத்து பாடல்களையும் ரசித்து பார்க்கின்றனர். படம் பார்த்துவிட்டு என் அப்பா என்னை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்திய அளவிற்கு சரத்குமார் சாரின் நடிப்பு அப்பா கதாபாத்திரத்தில் பொருந்தியது என்று வம்சி கூறினார்.
அதை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜ், தெலுங்கில் மாஸ் படங்களிலேயே நடித்து கொண்டிருந்த ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், மகேஸ் பாபு போன்ற நடிகர்களை வைத்து குடும்ப படம் எடுத்து வெற்றி கண்டேன். அதேபோல், மாஸ் ஹீரோவான விஜய்யை வைத்து குடும்ப படம் எடுக்க நினைத்தேன். வாரிசு கதை விஜய்க்கு சொல்லப்பட்டது அவருக்கு பிடித்து விட்டதால் இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறினார்.
முன்னதாக தயாரிப்பாளர் தில் ராஜ் மேடைக்கு பேச வரும் போது, வாரிசு பட பாடல் வெளியீட்டு விழாவில், அவர் பேசிய பிரபல பேச்சை வைத்து பட குழுவினர் கிண்டல் செய்தது அங்கிருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இறுதியில் பேசிய நடிகர் சரத்குமார், தொலைபேசி வைத்திருப்பவர்கள் எல்லாரும் இப்போது விமர்சகர்களாக உள்ளதாக விமர்சித்தார். உங்கள் கருத்தை ரசிகர்கள் மீது திணிக்காதீர்கள் அவர்களே படத்தை பார்த்து முடிவு செய்யட்டும் என கூறினார்.
முன்னதாக இயக்குனர் வம்சி பேசிய தமிழ் பேச்சில் சில திருத்தங்களை நடிகர் விடிவி கணேஷ் தெரிவித்திருந்தார். அதை குறிப்பிட்ட நடிகர் சரத் குமார் அப்படி சொல்ல தேவையில்லை என மறுத்து கூறியதால், இருவருக்கும் இடையே மேடையிலேயே கருத்து வேறுபாடு எழுந்தது இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.