சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில்
அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வால் ஒட்ட நறுக்கப்படும். பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி கொடுத்தது போல கூழை
கும்பிடு போட்டு அனுமதி கொடுக்கும் அரசு தமிழ்நாட்டில் இல்லை. ஆந்திர மாநிலம், குண்டூர் நகரத்தில் மண்டல் கமிஷனின் தலைவராக இருந்த மண்டல் சிலையில் வைக்கப்பட்ட கிரீடத்தை உள்ளூர் நகராட்சியை வைத்து ஆந்திர அரசு தகர்த்துள்ளது.
இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மண்டல் சிலையை நிறுவ ஆந்திர அரசு முன் வர வேண்டும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டுள்ள சூழலில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதித்துள்ளதை ஏற்கிறோம். ஆனால் சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விசிக மற்றும் இடதுசாரிகள் தேர்தலில் பங்கேற்கக்கூடிய கட்சிகள். சமூக நல்லிணக்க பேரணியை அறிவித்தவுடன் ஏராளமான அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்து பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
சமூக நல்லிணக்க பேரணியை நடத்துவோர் மதம் சார்ந்த வெறுப்பு அரசியலை பேசுகிற அமைப்புகள் அல்ல. 23 கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சமூக நல்லிணக்க
பேரணியில் இணைவதாக அறிவித்துள்ளனர். சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
டிஜிபியை சந்தித்து இதுதொடர்பாக முறையிட இருக்கிறோம். ஆர்எஸ்எஸ்-ஐ
எங்களோடு அரசு முடிச்சுப் போட வேண்டாம். போட்டிக்கு நாங்கள் பேரணி நடத்துவதாக
பாஜக சொன்னால் அதை ஏற்கிறேன். மேலும் காந்தியை படுகொலை செய்தவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள் என்பது உலகறிந்த உண்மை. அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து 27 ஆண்டுகள் ஆகிறது.
அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்பது அம்பேத்கரை இவர்கள்
தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதாகும். இந்துத்துவத்தை வீழ்த்தாமல் சமத்துவம் மலராது என முழங்கியவர் அம்பேத்கர். அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று பாஜக சொல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த சொல்லப்படும் மூன்று காரணங்களும் முற்றிலும் பொருந்தாத காரணங்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்எஸ்எஸ்-ம் அதன் ஆதரவு அமைப்புகளும்
தடை செய்யப்பட வேண்டும். துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் அவர்கள் என்றும்
ஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்யாமல் இந்தியா போன்ற நாட்டில் பரந்துபட்டு மக்களுக்கு தொண்டாற்றும் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்தது உள்நோக்கம் உள்ளதாக பார்க்கிறோம் என்றார்.
பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கொடுத்தது போல கூழை
கும்பிடு போட்டு அனுமதி கொடுக்கும் அரசு தமிழ்நாட்டில் இல்லை. பிற மாநிலங்களில் செய்த சேட்டையை தமிழ்நாட்டில் செய்யலாம் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பார்க்கிறார்கள் என்றார் திருமாவளவன்.








