அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காக சொந்த செலவில் வாகனம் வாங்கியது மட்டுமின்றி , அவரே வாகன ஓட்டுனராக செயல்படுவதால் பெற்றோர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு…
“கேடில் விழுச்செல்வம் கல்வி” என்பது வள்ளுவர் வாக்கு. கல்வி ஒருவனுக்குக் கண் போன்றது. அந்த கல்வி எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பது இங்கு ஒரு ஆரியரின் தீரா கனவாக உள்ளது. கண்ணை மூடி கனிவுடன் நீ படித்தால், கனவில் எண்ணியபடியே உன் வாழ்க்கை அமையும் என்று சொல்வார்கள்.
அப்படிப்பட்ட கல்வியை தமிழகத்தின் எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் முழுமையாக பெற வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர். அவர்போன்றே எல்லோரும் இருந்துவிட்டால் அறிவு எனும் பெட்டகத்தை திறக்க உதவும் அந்த கல்வியை தடையின்றி எல்லோரும் அடைந்து விடுவார்கள்.
அப்படியான ஒரு நிகழ்வு எங்கு நடந்துள்ளது தெரியுமா?
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2013 ஆம் ஆண்டு பொன்.பால்துரை என்பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். அப்போது அப்பள்ளியில் 8 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். இதை அடுத்து தலைமை ஆசிரியர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினார். விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக தற்போது 93 மாணவர்கள் அப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதனையடுத்து, இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியில் இருந்த நிலையில், ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் பொன்.பால்துரை தனது சொந்த செலவில் கூடுதலாக 3 தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளார். அவர்களுக்கு மாதம் ரூ 5000 ஆயிரம் ஊதியம் வழங்குகிறார். மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக கிராம மக்கள் உதவியுடன் நவீன சீருடை, ஷீ, ஸ்மார்ட் வகுப்பறை கணினி வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் போக்குவரத்து வசதியில்லாமல் இருக்கும் ஓடைப்பட்டி, உசிலம்பட்டி, கட்டானிபட்டி, வடவன்பட்டி, கல்லம்பட்டி, மல்லிப்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல சிரமப்பட்டனர். அவர்கள் வசதிக்காக பொன்.பால்துரை தனது சொந்த செலவில் வாகனம் வாங்கி உள்ளார். அந்த வாகனத்தை தானே ஓட்டி சென்று மாணவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து வரவும், மாலையில் வீட்டில் விடவும் முடிவு செய்துள்ளார்.இதனால் அவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










