அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும் என தருமபுரி எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சீன தூதரகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 10 அரசு மேல்நிலை
பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்துவதற்கான அகன்ற தொடுதிரை தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன. இதை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேசியதாவது:
கடந்த சில நாட்களாக ஒன்றிய பாஜக அரசு வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் தடுத்து, நீர்த்து போக செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். இதுவரை அமலாக்கத்துறை 500-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் வெறும் 120 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக தற்பொழுது எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஒருவர் மீது எந்த ஒரு புகாரும் இல்லை என்றாலும் கூட சோதனை நடத்தலாம் அதன் பிறகு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். அமலாக்கத் துறைக்கு வாஷிங் மெஷின் என பெயர் சூட்டலாம். ஏனென்றால் ஊழல் செய்தவர்களாக இருந்தாலும் கூட, அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு பாஜகவில் சேர்ந்தால், அவர்கள் புனிதராவார்கள். எவ்வளவு ஊழல் செய்தவர்களை கூட அமலாக்கத்துறை தூய்மைப்படுத்தி விடுமாம்.
ஆனால் திமுகவை பொறுத்தவரை சட்டத்துறை மிகவும் வலிமையானது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம். இது எல்லாமே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு
செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை சிதைக்கும் நோக்கில் பாஜக
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு இந்த மாதிரியான திட்டங்களையே பாஜக அரசு கடைபிடித்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு பாஜகவினர் திட்டமிடுகின்றனர். ஆகையால் அதிமுக முன்னாள் அமைச்சர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு தயக்கம் காட்டி வருகிறது .
இவ்வாறு எம்பி செந்தில்குமார் கூறினார்.
ஸ்ரீ.மரகதம்







