பிரதமர் மோடிக்கு அனைத்து துறைகளையும் முழுவதுமாக குழப்பிவிட்டார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்று வருகிறது.
சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதோடு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொள்வது, கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுப்பது, அடுத்தக்கட்டமாக ஆலோசனை கூட்டத்தை எப்போது நடத்துவது? கூட்டணிக்கான பெயர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டாதக தெரிகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு 10 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது, இதில் அவர் அனைத்து துறைகளையும் முழுவதுமாக குழப்பிவிட்டார். பிரதமர் மோடி மக்களிடையே வெறுப்பை உருவாக்கியுள்ளார், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது, அனைத்து துறைகளிலும் வேலையின்மை உள்ளது. இந்திய மக்கள் அவரது ஆட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, எனவே ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள்கின்றன.
இவ்வாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.







