அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்பு இளைஞர் ஒருவர், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிக்குமார், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பாக இளைஞர் ஒருவர், தான் ஏற்கனவே அளித்த 10 லட்ச ரூபாயினை திருப்பித்தரக்கோரி, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பணம் தர மறுத்ததால் மனமுடைந்த இளைஞர், தான் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 97 சதவிகிதம் தீக்காயமுற்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என தெரியவந்தது. இவருக்கு மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பழனிக்குமார், கடந்த 2019ம் ஆண்டு 23 லட்ச ரூபாய் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதில் 13 லட்ச ரூபாயினை மட்டும் திருப்பி தந்த பழனிக்குமார், மீதமுள்ள 10 லட்ச ரூபாயினை தராமல் காலம் தாழ்த்தி வந்ததும்
விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பழனிக்குமார் மீது உயிரிழப்புக்கு தூண்டுதல் மற்றும் பணமோசடி என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.








