சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கோபி; இவரது மகன் பிரவீன் (26). இவர் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மி (24) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஷர்மியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன் பிரவீனும் ஷர்மியும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த சோகத்தில் வாழ்ந்து வந்த ஷர்மிளாவும் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் சென்னை பாரிமுனையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,
“பள்ளிக்கரணையில் பிரவீன் ஆவணக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை. பிப்ரவரி மாதம் கொலை நடைபெற்ற நிலையில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தர சட்டம் உள்ள நிலையில் உரிய பாதிகாப்பு தர அரசு தவறி விட்டது. ஆணவ கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், திமுக தலையீட்டின் காரணமாக வன்கொடுமை தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்தப்படவில்லை.
பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட 5 பேர் மீது மற்றும் புகார் அளிக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் மீது புகார் தெரிவிக்க கூடாது என்றும் காவல்துறை ஷர்மிளாவை நிர்பந்தித்து உள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது. ஆணவ கொலையில் தமிழ்நாடு 3 ஆம் இடத்தில் உள்ளது.
ஷர்மிளாவின் மரணம், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்
தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றி பாரபட்சம் இல்லாத புலனாய்வு அதிகாரியை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.








