அம்பானி, அதானி குறித்து பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறு – Logically Facts தகவல்!

This News is Fact Checked by ‘Logically Facts‘ தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்பானி,  அதானி குறித்து பேசுவதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத்…

This News is Fact Checked by ‘Logically Facts

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்பானி,  அதானி குறித்து பேசுவதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டு தவறானது எனத் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் மே 8 ஆம் தேதி நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி பற்றி பேசுவதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திடீரென்று நிறுத்திவிட்டதாக கூறினார்.  மேலும், காங்கிரஸ் கட்சி அவர்களிடம் இருந்து டெம்போ நிறைய பணத்தை பெற்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

“நண்பர்களே,  கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) தூங்கி எழுந்தவுடன் ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  ரஃபேல் விவகாரம் வெளிவந்த பின்னர் புதிய மந்திரத்தை உச்சரித்து வந்தார்.  தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள், தொழிலதிபர்கள் என்று பல ஆண்டுகளாக பிரச்னையை கிளப்பிய ராகுல் காந்தி,  பின்னர் மெதுவாக அம்பானி – அதானி, அம்பானி – அதானி என்று சொல்லத் தொடங்கினார்.  ஆனால், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி – அதானி குறித்து தவறாக பேசுவதை நிறுத்திவிட்டார்” என்று பிரதமர் மோடி கரீம்நகர் பரப்புரை கூட்டத்தில் பேசியிருந்தார். இந்த வீடியோ பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு

பிரதமரின் இந்த குற்றச்சாட்டை ஆய்வு செய்த Logically Facts,  மார்ச் 17 முதல் மே 8 வரை ராகுல் காந்தி ஆற்றிய தேர்தல் பரப்புரைகள் மற்றும் பேரணிகளில் குறைந்தது 25 முறையாவது அதானி – அம்பானி குறித்து பேசியுள்ளதை உறுதி செய்துள்ளது.  பிரதமரின் கூற்று தவறானது என்றும் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  அதற்கு அடுத்த நாளான மார்ச் 17 முதல் பிரதமர் நரேந்திர மோடி கரீம்நகர் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாளான மே 8 ஆம் தேதி வரை,  ராகுல் காந்தியின் தேர்தல் பரப்புரை/பேரணிகளில் அவர் ஆற்றிய உரையை Logically Facts ஆய்வு செய்தது.

ராகுல் காந்தி உரையாற்றிய வீடியோக்கள் மற்றும் உரைகளின் எழுத்துப்பூர்வ பதிவுகள், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலும், யூடியூப் சேனலிலும் கிடைக்கின்றன.  மே மாதத்தில் மட்டும் 6 முறை அதானி மற்றும் அம்பானி குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மே 7 ஆம் தேதி ஜார்க்கண்டின் சிங்பம் பகுதியில் நடைபெற்ற பரப்புரையின் போது, “மக்களுக்கான தண்ணீர்,  காடு,  நிலம் மீது தான் அதானியின் கண்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும்.  நரேந்திர மோடி அதானிக்காக வேலை செய்கிறார். அதானி மற்றும் நரேந்திர மோடி அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர். இந்த புத்தகம் இல்லாமல் அவரது ஆட்சி நடைபெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இது கீழ்க்காணும் வீடியோவில் (3:09 – 3:40 நிமிடங்கள்) இடம்பெற்றுள்ளது.

மே 6 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, இந்திய அரசியலமைப்பு இல்லாமல் போனால், நம்முடைய அனைத்து உரிமைகளும், நாட்டில் உள்ள காடுகளும் அதானி போன்ற கோடீஸ்வரர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.  அதானி குறித்து அவர் குறிப்பிட்டது கீழ்க்காணும் வீடியோவில் 14:35 – 15:55 நிமிடங்களுக்கு இடையிலான பகுதியில் காணப்படுகிறது.

ஏப்ரல் 29 ஆம் தேதி சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  “பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கமாட்டோம், ஒப்பந்த முறையை நிறுத்துவோம்,  விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று எந்த பாஜக தலைவராவது உறுதியளிப்பார்களா? நான் சவால் விடுகிறேன். அவர்களால் இதை சொல்ல முடியாது.  ஏனெனில் அவர்களின் சித்தாந்தம் அம்பேத்கர்,  நேரு,  காந்தி ஆகியோரது போன்றது அல்ல. குறிப்பிட்ட சிலருக்கு உதவுவதே அவர்களின் சித்தாந்தம்.  இந்தியாவின் செல்வம்,  நிலம்,  காடு,  நீர் அனைத்தையும் அதானி, அம்பானி போன்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் சித்தாந்தம்” என்று தெரிவித்திருந்தார்.  இது கீழ்க்காணும் வீடியோவில் 6:33 – 7:22 நிமிடங்களுக்கு இடையிலான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதேபோல் குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தேர்தல் பரப்புரையின்போது அம்பானி மற்றும் அதானியை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியுள்ளார்.  இதன்மூலம் ராகுல் காந்தி அதானி, அம்பானியை குறிப்பிட்டு தொடர்ச்சியாக பேசி வருவதும்,  பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This Story was originally published by ‘Logically Facts‘ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.